×

மக்களவை தேர்தல் 7 கட்டமாக நடைபெறுகிறது: தமிழ்நாட்டில் ஏப்.19ம் தேதி வாக்குப்பதிவு


* 46 நாட்களுக்குப் பின் ஜூன் 4ல் வாக்கு எண்ணிக்கை
* விளவங்கோடு சட்டப்பேரவை தொகுதிக்கும் ஏப்.19ல் இடைத்தேர்தல்
* தேர்தல் நடத்தை விதி உடனடியாக அமலுக்கு வந்தது
* புதுவைக்கும் ஏப்.19ல் தேர்தல்
* தலைமை தேர்தல் ஆணையர் அறிவிப்பு

புதுடெல்லி: நாடு முழுவதும் மிகவும் எதிர்பார்க்கப்பட்ட மக்களவை தேர்தலுக்கான தேதியை தேர்தல் ஆணையம் நேற்று வெளியிட்டது. இதில் 7 கட்டங்களாக தேர்தல் நடத்தப்பட உள்ளது. தமிழ்நாடு, புதுச்சேரி உள்ளிட்ட 22 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் முதல் கட்டமாக வரும் ஏப்ரல் 19ம் தேதி வாக்குப்பதிவு தொடங்குகிறது. இறுதிகட்ட தேர்தல் ஜூன் 1ம் தேதி வாக்குப்பதிவு முடிந்ததும், ஜூன் 4ம் தேதி வாக்குகள் எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்பட உள்ளன. இதன் மூலம் தமிழ்நாட்டில் தேர்தல் முடிந்து 46 நாட்கள் கழித்து முடிவு அறிவிக்கப்பட இருக்கிறது. மக்களவை தேர்தலோடு விளவங்கோடு சட்டப்பேரவை தொகுதிக்கு இடைத்தேர்தலும் நடத்தப்பட உள்ளது. தேர்தல் அட்டவணை வெளியிடப்பட்டதைத் தொடர்ந்து, தமிழ்நாடு உள்பட முதற்கட்ட தேர்தல் நடைபெறும் அனைத்து மாநிலங்களிலும் உடனடியாக தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலுக்கு வந்துள்ளன.

* பதவிக்காலம் முடிகிறது

கடந்த 2014 மற்றும் 2019ம் ஆண்டுகளில் நடந்த மக்களவை தேர்தல்களில் பாஜ தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி வெற்றி பெற்று, தொடர்ந்து 10 ஆண்டுகளாக ஒன்றியத்தில் ஆட்சி செய்து வருகிறது. 2019ல் தொடர்ந்து 2வது முறையாக ஆட்சியை கைப்பற்றிய பாஜ அரசின் 17வது மக்களவையின் பதவிக்காலம் வரும் ஜூன் 16ம் தேதியுடன் முடிவடைகிறது. இதனால் மார்ச் மாதத்தில் மக்களவை தேர்தலை நடத்த தேர்தல் ஆணையம் அனைத்து ஏற்பாடுகளையும் தீவிரமாக மேற்கொண்டது. மார்ச் 15ம் தேதி தேர்தலுக்கான தேதிகள் அறிவிக்கப்படும் என தகவல்கள் வெளியாகி இருந்தன.

* அட்டவணை அறிவிப்பு:

இந்நிலையில், பெரும் எதிர்பார்ப்புக்கு மத்தியில், தலைமை தேர்தல் ஆணையர் ராஜீவ்குமார் மற்றும் தேர்தல் ஆணையர்கள் ஞானேஷ் குமார், சுக்பீர் சிங் சாந்து ஆகியோர் நேற்று மாலை 3 மணி அளவில் செய்தியாளர்களை சந்தித்து தேர்தல் அட்டவணையை வெளியிட்டனர். இதில், 543 உறுப்பினர்களை தேர்வு செய்வதற்கான மக்களவை தேர்தல் 7 கட்டங்களாக நடத்தப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. முதல் கட்டமாக வரும் ஏப்ரல் 19ம் தேதி வாக்குப்பதிவு தொடங்குகிறது. இதில் தமிழ்நாடு, புதுவை உட்பட 22 மாநிலங்களில் தேர்தல் நடத்தப்படுகிறது. தமிழ்நாட்டில் 39 தொகுதிகளுக்கும், புதுச்சேரியில் உள்ள 1 தொகுதிக்கும் ஒரே கட்டமாக ஏப்ரல் 19ம் தேதியே தேர்தல் நடத்தி முடிக்கப்பட உள்ளது. இதுபோல, 10 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்கள் முதல் கட்ட தேர்தலிலேயே வாக்குப்பதிவை நிறைவு செய்கின்றன. முதல் கட்ட தேர்தலில் 102 தொகுதிகளில் வாக்குப்பதிவு நடக்கிறது.

* ஜூன் 4ல் வாக்கு எண்ணிக்கை:

ஏப்ரல் 26ம் தேதி 2ம் கட்டமாக 13 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் உள்ள 94 தொகுதிகளுக்கும், 3ம் கட்டமாக மே 7ம் தேதி 10 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் உள்ள 94 தொகுதிகளுக்கும், 4ம் கட்டமாக மே 13ம் தேதி 10 மாநில மற்றும் யூனியன் பிரதேசங்களில் 96 தொகுதிகளுக்கும், 5ம் கட்டமாக மே 20ம் தேதி 8 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் உள்ள 49 தொகுதிகளுக்கும், 6ம் கட்டமாக மே 25ம் தேதி 7 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் 57 தொகுதிகளுக்கும், நிறைவாக 7ம் கட்டமாக ஜூன் 1ம் தேதி 8 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் உள்ள 57 தொகுதிகளுக்கும் தேர்தல் நடத்தி முடிக்கப்படுகிறது. மொத்தம் 44 நாட்கள் தேர்தல் நடத்தப்படுகிறது. இதைத் தொடர்ந்து ஜூன் 4ம் தேதி அனைத்து வாக்குகளும் எண்ணப்பட்டு, அன்றைய தினமே தேர்தல் முடிவுகள் வெளியிடப்பட உள்ளன.

* நடத்தை விதிமுறை அமல்:

தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதைத் தொடர்ந்து, தமிழ்நாடு உட்பட முதல்கட்ட தேர்தல் நடக்கும் மாநிலங்களில் தேர்தல் நடத்தை விதிமுறைகள் நேற்று முதல் அமலுக்கு வந்துள்ளன. தமிழ்நாட்டில் வேட்பு மனு தாக்கல் வரும் 20ம் தேதியே தொடங்குகிறது. வேட்புமனுக்களை தாக்கல் செய்வதற்கான கடைசி நாள் வரும் 27ம் தேதியாகும். அதைத் தொடர்ந்து அடுத்த நாள் வேட்புமனு பரிசீலனை நடத்தப்படும். வரும் 30ம் தேதி வேட்புமனுவை வாபஸ் பெறுவதற்கான கடைசி நாள் என தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. தமிழகத்தில் தேர்தல் முடிந்து 46 நாட்கள் கழித்துதான் முடிவு அறிவிக்கப்பட உள்ளது. எனவே தமிழக மக்கள் வாக்களித்து நீண்ட நாட்கள் முடிவுக்காக காத்திருக்க வேண்டி உள்ளது குறிப்பிடத்தக்கது.

* பேரவை இடைத்தேர்தல்:

இதுமட்டுமின்றி 13 மாநிலங்களில் தற்போது காலியாக உள்ள 26 சட்டப்பேரவை தொகுதிகளுக்கான இடைத்தேர்தலும் மக்களவை தேர்தலுடன் சேர்த்து நடத்தப்பட உள்ளது. அதன்படி தமிழ்நாட்டில் விளவங்கோடு தொகுதிக்கான சட்டப்பேரவை இடைத்தேர்தல், மக்களவை தேர்தலுக்கான முதல்கட்ட வாக்குப்பதிவு நடக்கும் ஏப்ரல் 19ம் தேதியே நடக்கும் என தலைமை தேர்தல் ஆணையர் ராஜீவ்குமார் அறிவித்துள்ளார். எனவே விளவங்கோடு தொகுதி மக்கள் மக்களவை தேர்தல் மற்றும் சட்டப்பேரவை இடைத்தேர்தலுக்கான வாக்குகளை ஒரே சமயத்தில் பதிவு செய்வார்கள். தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதைத் தொடர்ந்து நாடு முழுவதும் தேர்தல் களம் சூடுபிடித்துள்ளது.

The post மக்களவை தேர்தல் 7 கட்டமாக நடைபெறுகிறது: தமிழ்நாட்டில் ஏப்.19ம் தேதி வாக்குப்பதிவு appeared first on Dinakaran.

Tags : Lok Sabha elections ,Tamil Nadu ,Chief Election Commissioner ,Lok Sabha Election ,Tamil ,Nadu ,Dinakaran ,
× RELATED விக்கிரவாண்டி இடைத்தேர்தலை வெப்பம்...